தொழிலாளி மர்ம சாவு
தொழிலாளி மர்ம சாவு
கூடலூர்
கூடலூர் தாலுகா தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 52). இவர் நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் கீழ் நாடுகாணி பகுதியில் ஒரு எஸ்டேட்டில் நடந்து சென்றபோது காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்ததாக சிலர் அவரை கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதைத்தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே விஜயன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் மற்றும் நாடுகாணி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது காட்டு யானை தாக்கியதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நிலையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்து அவர் உயிரிழந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததால் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் உடல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.