ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

திருவட்டார் அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார். மற்றொரு சம்பவத்தில் கிணற்றில் தவறி விழுந்த முதியவரும் பரிதாபமாக இறந்தார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார். மற்றொரு சம்பவத்தில் கிணற்றில் தவறி விழுந்த முதியவரும் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குளிக்க சென்றார்
திருவட்டார் அருேக உள்ள மலவிளை ஊரடியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது38), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.
அருள்ராஜ் நேற்று முன்தினம் மாலையில் அருகில் உள்ள பரளியாற்றில் குளிக்க சென்றார். அங்கு தண்ணீரில் இறங்கிய போது கால் இடறி ஆழமான பகுதியில் விழுந்ததாக தெரிகிறது. இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரையில் நின்றவர்கள் உறவினர்களுக்கும், திருவட்டார் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
முதியவர் மாயம்
திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் வலியவீட்டுவிளையை சேர்ந்தவர் ஜாண்சன் (60), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்ைல. அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலையில் அந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஜாண்சனின் பிணம் கிடந்தது. இதைப்பார்த்த கிணற்றின் உரிமையாளர் ஜாண்சனின் உறவினருக்கும், திருவட்டார் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஜாண்சன் மது போதையில் கிணற்றின் அருகில் அமர்ந்திருந்த போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






