கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை: தொழிலாளி வெட்டிக்கொலை
பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வானூர்,
கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை
வானூர் அருகே அச்சரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முரளிதாஸ் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கும், மரக்காணம் அருகே உள்ள பழமுக்கல் பகுதியை சேர்ந்த பாபு (32) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் 30-ந் தேதி முரளிதாஸ், அச்சரம்பட்டு ஏரிக்கரையில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாபு மற்றும் அவரது நண்பர் புதுச்சேரி கோரிமேடு காமராஜ் நகரை சேர்ந்த ஜெகன் (35) ஆகியோர் முரளிதாசுடன் தகராறு செய்தனர்.
வெட்டிக்கொலை
அப்போது திடீரென 2 பேரும் சேர்ந்து முரளிதாசை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் காலில் பலத்த வெட்டு விழுந்த முரளிதாஸ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை முரளிதாஸ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஜெகனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பாபுவை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் தொழிலாளி கொலையான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.