தொழிலாளியிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.22 ஆயிரம் மோசடி
திருவண்ணாமலையில் தொழிலாளியிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.22 ஆயிரம் மோசடி ெசய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் தொழிலாளியிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.22 ஆயிரம் மோசடி ெசய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சற்குணம் (வயது 50), தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று திருவண்ணாமலை போளூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு தனது வங்கிக்கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்பதை பார்ப்பதற்காக சென்றார்.
பின்னர் அந்த மையத்தில் உள்ள பணம் எடுக்கும் எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி வங்கிக்கணக்கை பார்வையிட்டார். அதனை அருகில் இருந்த அடையாளம் தெரியாத வாலிபர் கவனித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
வங்கிக்கணக்கை பார்த்துவிட்டு சற்குணம் அங்கிருந்து கிளம்பும் போது பணம் எடுக்கும் எந்திரத்தில் இருந்து ஏ.டி.எம். கார்டை எடுக்க முடியவில்லை.
போலி ஏ.டி.எம். கார்டு
பின்னால் இருந்த அடையாளம் தெரியாத நபர் எந்திரத்தில் கார்டு சிக்கி கொண்டது. அதனால் காவலாளியை அழைத்து வருமாறு கூறியுள்ளார். பின்னர் சற்குணம் காவலாளியை அழைத்து வர சென்ற நேரத்தில் அந்த நபர் சற்குணத்தின் ஏ.டி.எம். கார்டை எடுத்து கொண்டு அவரிடம் இருந்த போலி ஏ.டி.எம். கார்டை அதில் வைத்துள்ளார்.
இதை அறியாமல் சற்குணம் போலி ஏ.டி.எம். கார்டை எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து அவரது செல்போன் எண்ணிற்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.22 ஆயிரம் எடுத்தது போன்று குறுஞ்செய்தி வந்து உள்ளது.
போலீசார் விசாரணை
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு விரைந்து சென்று தனது வங்கிக்கணக்கை தணிக்கை செய்தார்.
அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் தன்னிடம் போலி ஏ.டி.எம். கார்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு பின்னால் இருந்த அடையாளம் தெரியாத வாலிபர் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று அவர் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.