கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்
வால்பாறையில் பட்டப்பகலில் கரடி தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் பட்டப்பகலில் கரடி தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கரடி தாக்கியது
வால்பாறையை அடுத்த இஞ்சிப்பாறை எஸ்டேட் கீழ் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 57). இவர் நேற்று மதியம் 12 மணியளவில் 4-ம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதருக்குள் மறைந்து இருந்த கரடி, திடீரென அய்யப்பனை தாக்கியது.இதில் அவரின் கால் எலும்பு முறிந்து பலத்த காயம் அடைந்தார்.
இதனைக்கண்ட சக தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த அய்யப்பனை மீட்டு, எஸ்டேட் தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
சிகிச்சை
அதன்பின்னர் அய்யப்பனை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் கரடி தாக்கி படுகாயம் அடைந்த அய்யப்பனை ஆஸ்பத்திரியில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதேபோல பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆறுதல் கூறினர்.
பொதுமக்கள் பீதி
வால்பாறை பகுதியில் பட்டப்பகலில் தேயிலை தோட்டத்தில் கரடி தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறையில் வனவிலங்குகள் தேயிலை தோட்ட தொழிலாளர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருவதால் இதனை தடுக்கவும், தொழிலாளர்களை பாதுகாக்கவும் வனத்துறையினர், எஸ்டேட் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மானாம்பள்ளி வனச்சரகர் மற்றும் வால்பாறை போலீசாரை பொதுமக்கள் முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வனத்துறையினர், போலீசார் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தினருடன் இணைந்து பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.