தொழிற்சாலையில் பணியின்போது காயமடைந்த தொழிலாளி சாவு - உறவினர்கள் சாலை மறியல்


தொழிற்சாலையில் பணியின்போது காயமடைந்த தொழிலாளி சாவு - உறவினர்கள் சாலை மறியல்
x

தொழிற்சாலையில் பணியின்போது காயமடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 43). இவர் காக்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதியன்று கேசவன் தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்தபோது திடீரென காயமடைந்தார். இதையடுத்து அந்த தொழிற்சாலை அதிகாரிகள் அவரை திருவள்ளூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்று சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உடல்நிலை தேராத காரணத்தால் மீண்டும் கேசவனை அவரது வீட்டார் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கேசவன் நேற்று சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். ஆனால் இறந்த கேசவனின் குடும்பத்தாருக்கு அந்த தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் எந்த உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கேசவனின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து திடீரென திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையான போளிவாக்கம் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினா். இதனைத் தொடர்ந்து அனைவரும் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இறந்துபோன தொழிலாளி கேசவனுக்கு திருமணம் ஆகிய மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story