பஸ் மோதி தொழிலாளி காயம்
சாத்தான்குளம் அருகே பஸ் மோதி தொழிலாளி காயம் அடைந்தார்.
தட்டார்மடம்:
நாகர்கோவிலில் இருந்து வந்த அரசு பஸ் ஒன்று சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டது. சாத்தான்குளம் ஊருக்கு வெளியே சென்ற போது பஸ்சில் இருந்த பெண் பயணி ஒருவரின் செல்போன் தவறி கீழே விழுந்தது. இதையடுத்து அவர் கூச்சலிட்டார். இதனால் என்ன நடந்தது என்று தெரியாமல் டிரைவர் பதற்றத்தில் பஸ்சை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது அங்கு வெல்டிங் கடையின் வெளியே வெல்டிங் அடித்துக் கொண்டிருந்த முத்து லெட்சுமணன் (வயது 44) என்பவர் மீது பஸ் மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள், பஸ் டிரைவரை கண்டித்தனர். தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சை திருச்செந்தூரை நோக்கி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.