மரம் முறிந்து விழுந்து தொழிலாளி படுகாயம்
புதுப்பேட்டையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்த போது மரம் முறிந்து விழுந்து தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே கோட்லாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 32). தொழிலாளி. நேற்று மாலை புதுப்பேட்டை பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது குப்புசாமி தனது மனைவி பேபி ராதிகாவுடன் மோட்டார் சைக்கிளில் புதுப்பேட்டையில் இருந்து மணம்தவிழ்ந்தபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, சூறைக்காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அங்கு சாலையோரத்தில் இருந்த மரம் திடீரென முறிந்து கணவன்-மனைவி மீது விழுந்தது. இதில் குப்புசாமி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலுர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தில் பேபிராதிகா சிறுகாயத்துடன் தப்பினார். இதனிடையே நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை முறிந்து விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.