கடப்பாரையால் தாக்கி தொழிலாளி கொலை


கடப்பாரையால் தாக்கி தொழிலாளி கொலை
x

மயிலாடுதுறையில், கடப்பாரையால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை சித்தர்காடு பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 53). கம்பி கட்டும் தொழிலாளி. இவரது தம்பி சின்னப்பிள்ளை என்கிற வீராசாமி (41). அண்ணன், தம்பியான இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை மற்றும் குடும்பத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சிறு, சிறு தகராறுகள் ஏற்பட்டு வந்தன.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் குமாரும், வீராசாமியும் சித்தர்க்காடு சம்பந்தங்குளம் கலைஞர் நகரில் உள்ள தங்களது தங்கை மாரியம்மாள் வீட்டுக்கு சென்றனர். அங்கு குமார், வீராசாமி மற்றும் மாரியம்மாளின் கணவர் வினோத்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது வீராசாமிக்கும், குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

கடப்பாரையால் தாக்கி கொலை

ஆத்திரம் அடைந்த வீராசாமி, அருகில் கிடந்த கடப்பாரையை எடுத்து குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த குமாரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து குமாரின் மனைவி ராதிகா அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வீராசாமியை கைது செய்தனர். இறந்த குமாருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story