கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கொலை: லாரி டிரைவர் திருச்சி சிறையில் அடைப்பு
கீழப்பழூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தொழிலாளி அடித்துக்கொலை
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழூர் அருகே உள்ள கோவில் எசனை கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 48), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மது போதையில் அய்யனார் கோவில் முன்பு உள்ள மரத்தடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த விஜயகாந்த் என்ற லாரி டிரைவர் இரும்பு ராடால் (கம்பியால்) மனோகரனின் தலைப்பகுதியில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மனோகரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் பதுங்கி இருந்த விஜயகாந்தை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து விஜயகாந்த் போலீசில் கூறியதாவது:-
சிறையில் அடைப்பு
விஜயகாந்தின் மனைவியுடன் கொலையுண்ட மனோகரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகவும் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதால் ஊர் முக்கியஸ்தர்கள் வைத்து பேசி பிரிந்து விட்டனர். அதன்பின் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மனோகரன் மதுபோதையில் விஜயகாந்தின் வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டு அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்தநிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த விஜயகாந்திடம் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நடந்த சம்பவம் பற்றி கூறவே ஆத்திரமடைந்த விஜயகாந்த் மனோகரனை தேடிச்சென்று இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட விஜயகாந்த்தை போலீசார் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.