கிரேன் தலையில் மோதியதில் தொழிலாளி பலி


கிரேன் தலையில் மோதியதில் தொழிலாளி பலி
x

கிரேன் தலையில் மோதியதில் தொழிலாளி பலியானார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா ராஜாளிப்பட்டி ஊராட்சி கல்லுக்காட்டுபட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 53). இவர், விராலிமலை அருகே உள்ள தனியார் இரும்பு தயாரிக்கும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று வழக்கம்போல் வேலைக்கு வந்த செல்வம் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அதிக எடை கொண்ட இரும்பு பொருட்களை தூக்கும் கிரேனில் இருந்த இரும்பு கொக்கி எதிர்பாராதவிதமாக செல்வத்தின் தலையில் வேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய அவர் அருகிலிருந்த கம்பிகளை குளிரூட்டும் தண்ணீர் தொட்டியில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட சக ஊழியர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு நிறுவனத்தில் இருந்த மருத்துவ பிரிவுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் செல்வத்தை பரிசோதனை செய்த போது, அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே செல்வம் இறந்த தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். பின்னர் செல்வத்தின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்ககோரியும் நிறுவனத்தின் அருகே உள்ள மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அங்கு வந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி தலைமையிலான போலீசார் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் செல்வத்தின் குடும்பத்தினர் மற்றும் நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ேபச்சுவார்த்தையில், நிறுவனத்தின் சார்பில் செல்வத்தின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story