11 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
11 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சேலம்,
சிறுமியிடம் சில்மிஷம்
பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40), கூலிதொழிலாளி. இந்த நிலையில் அவருடைய வீட்டுக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுமி வந்தாள். பின்னர் அவரிடம் தனது தாய்க்கு கால் விரலில் ஏற்பட்ட சிறிய காயத்துக்கு மருந்து போடுவதற்காக சுண்ணாம்பு கேட்டாள்.
அப்போது முருகேசன் அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். பின்னர் இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் அழுது கொண்டே தெரிவித்தாள். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
7 ஆண்டுகள் சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக முருகேசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.