இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த தொழிலாளிக்கு தர்ம அடி
வேடசந்தூர் அருகே இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
வேடசந்தூர் அருகே இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இளம்பெண்ணிடம் சில்மிஷம்
வேடசந்தூர் அருகே உள்ள வெறியம்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 27). கட்டிட தொழிலாளி. இன்று இவர், லட்சுமணன்பட்டியில் உள்ள குடகனாறு தடுப்பணை பகுதிக்கு வந்தார்.
அப்போது தடுப்பணையில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனியாக குளித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த ரங்கசாமி, அந்த பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.
பின்னர் இளம்பெண்ணிடம் அவர் சில்மிஷம் செய்தார். இதனால் அந்த பெண் கூச்சல் போட்டார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
தர்ம அடி
பின்னர் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ரங்கசாமியை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். மேலும் இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ரங்கசாமியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ரங்கசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்பணையில் தனியாக குளித்து கொண்டிருந்த இளம்பெண்ணிடம் வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.