தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை


தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை
x

நெல்லையில் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தற்கொலை நாடகமாடிய அவரது தாய் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லையில் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தற்கொலை நாடகமாடிய அவரது தாய் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளி

நெல்லை பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன் செல்லத்துரை (வயது 24). பெயிண்டிங் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு அவரது தாய் மற்றும் சகோதரிகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

செல்லத்துரை, நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனை அவரது தாய் மற்றும் சகோதரிகள் தட்டிக் கேட்கவே அவர்களை அடித்து உதைத்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையை கண்டித்தனர்.

தூக்கில் பிணமாக...

எனினும் நேற்று காலை மீண்டும் செல்லத்துரை மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் செல்லத்துரை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அங்கு விரைந்து வந்த போலீசார் செல்லத்துரை உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது குடும்பத்தினர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே செல்லத்துரையின் தாய் மற்றும் சகோதரிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் செல்லத்துரை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழுத்தை நெரித்துக்கொலை

பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், செல்லத்துரையை அவரது தாய் உள்ளிட்டவர்களே கழுத்தை நெரித்துக்கொலை செய்து விட்டு, பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, செல்லத்துரையின் தாயார் மரிய வைலட் (வயது 44), உறவினர் செல்வமணி (28) மற்றும் 17 வயது சிறுமி ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கொக்கிரகுளம் மகளிர் கிளை சிறை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story