பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்குள் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி


பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்குள் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
x

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்குள் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி அங்கும், இங்கும் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர்

அங்கும், இங்கும் ஓடியதால் பரபரப்பு

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நேற்று நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மதியம் கலெக்டர் அலுவலகத்திற்குள் சிறுமியுடன் வந்த ஒரு ஆண் தீக்குளிப்பதற்காக திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு அலறியபடி அங்கும், இங்கும் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த நபர் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி, கலெக்டர் மனு வாங்கும் அறை அருகே ஓடினார். அவரை தடுக்க போலீசார் அவரை பின்தொடர்ந்து துரத்திய படி சென்றனர். பின்னர் அந்த நபர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு, ஓடிச்சென்று அங்கிருந்த தூணில் தலையால் முட்டி சத்தம் போட்டு கொண்டே இருந்தார். இதையடுத்து போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து வேனில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

தாயின் பட்டா இடம்

பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், அவர் பெரம்பலூர் திருநகரை சேர்ந்த கூலித் தொழிலாளி சந்துரு (வயது 54) என்பதும், அவருடன் வந்த சிறுமி அவருடைய மகள் என்பதும் தெரியவந்தது. கடந்த 1972-ம் ஆண்டு பெரம்பலூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டபோது சந்துருவின் அம்மா கனகத்தம்மாள் நிலமும் கையகப்படுத்தப்பட்டதாம். அதற்கு பதிலாக வடக்கு மாதவியில் 3 சென்ட் நிலம் கனகத்தம்மாள் பெயரில் பட்டா போட்டு வழங்கப்பட்டதாம். அவரும் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பதிவு செய்யாமல் தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணுக்கு அந்த நிலத்தை விற்று விட்டதாக கூறப்படுகிறது.

தன்னிடம் வழங்குமாறு...

அந்த நிலத்தை வாங்கிய பெண்ணும் அங்கு வீடு கட்டி 8 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறாராம். கனகத்தம்மாள் கடந்த 2010-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதற்கிடையே சந்துருவும் பிழைப்புக்காக சென்னை சென்று விட்டார். தற்போது சென்னையில் இருந்து திரும்பிய சந்துரு அந்த பெண்ணிடம் அந்த இடம் தனது தாய் பெயரில் இருப்பதாகவும், அந்த இடத்தை தன்னிடம் வழங்குமாறு கேட்டும், இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக விசாரணை செய்த போலீசார் இரு தரப்பையும் தங்களிடம் உள்ள சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு 6-ந் தேதி (நேற்று) போலீஸ் நிலைத்தில் ஆஜராகுமாறு கூறி உள்ளனர். ஆனால் சந்துரு போலீஸ் நிலையம் வராமல் வாட்டர் பாட்டிலில் ஒரு லிட்டர் மண்எண்ணெயை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story