போலீசாரால் தேடப்பட்ட தொழிலாளி கைது
வாலிபர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட தொழிலாளி கைது
திண்டிவனம்
திண்டிவனம் அடுத்த தீவனூரை சேர்ந்தவர் இருதயராஜ் மகன் ஜெகன்(வயது 30). இவர் சம்பவத்தன்று பிரிந்து சென்ற அவரது மனைவி மகாலட்சுமியை அழைத்து வருவதற்காக அதே பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மகாலட்சுமியின் அக்கா கணவரும், தொழிலாளியுமான செஞ்சி தாலுகா தளவாளப்பட்டு அய்யனார் மகன் அன்புராஜ்(27) என்பவருக்கும் ஜெகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அன்புராஜ் உருட்டு கட்டையால் ஜெகனை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவுசெய்து தப்பி ஓடிய அன்புராஜை நேற்று கைது செய்தனர். அப்போது அவர் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் திருமணமான நாள் முதல் ஜெகன் அவரது மனைவி மகாலட்சுமியை வைத்து சரிவர குடும்பம் நடத்தாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மாமனார், மாமியாரை தாக்கி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தனது மோட்டார் சைக்கிளையும் ஜெகன் அடித்து உடைத்து விட்டார். மேலும் தனக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று ஜெகன் தன்னிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த நான் அவரை உருட்டு கட்டையால் தாக்கியதாக தெரிவித்தார்.