தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x

திருமுருகன்பூண்டி நகராட்சியில் பணிநீக்க அறிவிப்பை கண்டித்து தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்

திருமுருகன்பூண்டி நகராட்சியில் பணிநீக்க அறிவிப்பை கண்டித்து தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடக்கழிவு மேலாண்மை

தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருமுருகன்பூண்டி நகராட்சியிலும் தூய்மை பணியாளர்களும், கொசு ஒழிப்பு பணியாளர்களும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே அரசு வெளியிட்ட அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்களில் 50 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பணியில் இருந்து நிறுத்த உள்ளதாக தனியார் ஒப்பந்த நிறுவனம் அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் நேற்று பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதே இடத்தில் சமையல் செய்து, சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து திருமுருகன்பூண்டி கமிஷனர் ஆண்டவன், திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பணியாளர்கள் தரப்பில் கவுன்சிலர் சுப்பிரமணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ், நிர்வாகி பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் நிர்வாக அலுவல் விதியின்படி 50 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 2 நாள் அவகாசமும், 50 வயதுக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு 15 நாட்கள் அவகாசமும் வழங்குவதாக தனியார் ஒப்பந்த நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.

இதேபோல் பணிநீக்கம் செய்யப்பட உள்ள பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் பணிக்கு திரும்பினார்கள்.


Related Tags :
Next Story