2-ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு
எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அரவை பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேத்தியாத்தோப்பு,
பணிநிரந்தரம்
சேத்தியாதோப்பில் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் தினக்கூலி தொழிலளார்களாக கடந்த 30 ஆண்டுகளாக 120 பேர் உள்ளனர்.
நிரந்தர தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குதல், தினக்கூலி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டு்ம் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி பலக்கட்ட போராட்டங்களை தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்தார்கள். ஆனால் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 21-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் தரப்பில் அறிவித்தனர்.
இதையடுத்து, அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஒருவார காலஅவகாசம் தருமாறு கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் தொழிலளார்களும் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
2-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்
இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆலை முன்பு வாயிற்கூட்டம் நடத்தினர். இதற்கு கூட்டுக் குழு தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். வெங்கடாசலம், சிவக்குமார், வெங்கடேசன், அறிவழகன், தில்லை நடராஜன், ராமதாஸ், சேகர் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூட்டுக் குழு தலைவர் வேலவன் பேசுகையில், தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏதும் ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தொழிற்சங்க பேரவை கூட்டமைப்பில் உள்ள அனைத்து மட்ட தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஜனவரி 2-ந்தேதி முதல் அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.
அரவை பணிகள் பாதிப்பு?
எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையை பொறுத்தவரை கடந்த 27-ந்தேதி முதல் இந்த ஆண்டுக்கான அரவை பணிகள் தொடங்கியது. இதில் நாள் ஒன்றுக்கு 2500 டன் கரும்பு அரவை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில், ஆலையில் அரவை பணியில் பாதிப்புகள் ஏற்பட்டு, கரும்பு அறுவடை பணி பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதால் விவசாயிகளை தவிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது தொழிலாளர்களின் முடிவு.
தமிழகம் முழுவதும்
தமிழகத்தை பொறுத்தவரை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையுடன் சேர்த்து மொத்தம் 19 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்து இருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனால், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.