வாக்கு எண்ணிக்கை நடந்த மண்டபத்தில் குவிந்த தொழிலாளர்கள்
ரெயில்வே கூட்டுறவு நாணய சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திருச்சியில் ஒரு மண்டபத்தில் நடந்தது. அப்போது, அங்கு குவிந்து இருந்த தொழிலாளர்களிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ரெயில்வே கூட்டுறவு நாணய சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திருச்சியில் ஒரு மண்டபத்தில் நடந்தது. அப்போது, அங்கு குவிந்து இருந்த தொழிலாளர்களிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ரெயில்வே கூட்டுறவுநாணய சங்க தேர்தல்
தெற்கு ரெயில்வே ஊழியர்களின் நலனுக்காக ரெயில்வே கூட்டுறவு நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதை நிர்வகிக்கும் 2 பெண்கள் உட்பட 19 பேர் கொண்ட இயக்குனர்கள் குழுவை தேர்ந்தெடுக்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, திருச்சி, திருச்சி-2, சென்னை, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் என 6 கோட்டங்களுக்கான கூட்டுறவு நாணய சங்க தேர்தல் பலகட்டமாக நடத்தப்பட்டது. இதையொட்டி, இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜூலை 28-ந்தேதி முதல் கடந்த 2-ந்தேதி வரை நடைபெற்றது.
வாக்குப்பதிவு
இதில், எஸ்.ஆர்.எம்.யூ., டி.ஆர்.யு.இ., எஸ்.ஆர்.இ.எஸ்., ஏ.ஐ.ஓ.பி.சி., எஸ்.சி.எஸ்.டி. சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர். பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 4,820 உறுப்பினர்களை கொண்ட திருச்சி மற்றும் திருச்சி-2 கோட்டத்தில் 8 இயக்குனர்களுக்கான தேர்தலில் 31 பேர் போட்டியிட்டனர்.
கடந்த 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் வாக்குச்சீட்டு பெட்டிகள் திருச்சி கூட்டுறவு சங்க திருமண மண்டபத்துக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டன. இதுபோல் தென்னக ரெயில்வே பகுதியில் நடைபெற்ற அனைத்து வாக்குச்சீட்டு பெட்டிகளும் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை
இதைத்தொடர்ந்து நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க உதவி இயக்குனர் ராஜசேகர் முன்னிலையில் ஒவ்வொரு கோட்டம் வாரியாக ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதற்காக தென்னக ரெயில்வேயின் 6 கோட்டங்களில் இருந்தும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களான ரெயில்வே தொழிலாளர்கள் பஸ்களில் திருமண மண்டபத்துக்கு வந்து குவிந்தனர்.
இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முதலில் திருச்சி கோட்ட வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் எஸ்.ஆர்.எம்.யு. சங்கம் சார்பில் போட்டியிட்ட 37 பேரில் 17 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 20 பேரில் 19 பேர் வெற்றி பெற்றனர்.
தள்ளு, முள்ளு
வெற்றி பெற்றவர்கள் எஸ்.ஆா்.எம்.யு. துணை பொதுச்செயலாளர் வீரசேகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக வெளியே வந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, வெற்றிபெற்ற அணிக்கும், மற்றவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
மேலும் அவர்களுக்கு இடையே தள்ளு முள்ளும் உருவானது. உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், அவர்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மற்ற கோட்டங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.