சப்-கலெக்டர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
வடமாநிலத்தவர் வருகையை கட்டுப்படுத்தக்கோரி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை தென்னை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி
வடமாநிலத்தவர் வருகையை கட்டுப்படுத்தக்கோரி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை தென்னை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை போராட்டம்
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை நம்பி மரம் ஏறும் தொழிலாளர்கள், தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், தென்னை நார் தொழில்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.
இந்த நிலைலயில் வடமாநிலத்தவர்களின் வருகையின் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி நேற்று தமிழ்நாடு தென்னை தொழிலாளர் பேரவை சார்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
கண்டன கோஷங்கள்
அப்போது, வடமாநில தொழிலாளர்களின் வருகையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
குறைந்த கூலிக்கு வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதால் தென்னை தொழில் உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டுள்ளது. லட்சகணக்கான தமிழக தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
நலவாரியம் வேண்டும்
வடமாநிலத்தவர்கள் நிரந்தரமாக தங்கி வேலை செய்வதால், இங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும். தென்னை தொழிலாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும். வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தென்னை தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையொட்டி பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.