வெப்ப அலை தாக்கத்திலிருந்து தப்பிக்க தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை மாற்ற வேண்டும்


வெப்ப அலை தாக்கத்திலிருந்து தப்பிக்க தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை மாற்ற வேண்டும்
x

வெப்பஅலை தாக்கத்திலிருந்து தப்பிக்க தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெப்ப அலை தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வது எப்படி?, அதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது :-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வெப்பஅலை தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். தொழில் நிறுவனங்களில் தேவையான அளவு குடிநீர் மற்றும் மோர், எலுமிச்சம்பழ ஜூஸ் போன்றவற்றை அதிகளவில் வைக்க வேண்டும்.

சூரிய ஒளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பிற்பகலில் பணிபுரிவதை மாற்றியமைக்க வேண்டும்.

மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீர், கழிப்பிடம், முதலுதவி, மருத்துவ சிகிச்சை ஆகிய வசதிகளை கட்டாயம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அனைத்து தொழில் நிறுவனங்களும் இதை கட்டாயம் கடைபிடிப்பதை உறுதி செய்ய தொழிலக பாதுகாப்பு, மாவட்ட தொழில் மையம் மற்றும் தொழிலாளர் நலத்துறைச் சார்ந்த அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் அனைத்து பஸ் நிலையங்களில் நிழற் கூடங்கள் முறையாக இருப்பதையும், குடிநீர் வசதிகள் கட்டாயம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். நிழற்குடை இல்லாத இடங்களில் தற்காலிக நிழற்குடை அமைக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், உடல் பிரச்சினைகள் உள்ளவர்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களும் பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ளவும், மேலும், முன்கூட்டியே பணிகளை தொடங்கி பிற்பகல் நேரத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும்.

பொது சுகாதாரத் துறையினர் வெப்ப அலையினால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளை கண்காணிக்க வேண்டும். போதிய அளவு மருந்து மாத்திரைகள் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

விவசாயிகள் அதிகாலையிலேயே விவசாய பணிகளை மேற்கொண்டு பிற்பகல் 12 மணிக்குள் பணிகளை முடித்து செல்வதற்கான போதிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் காலையிலேயே பணிகளை தொடங்கி பிற்பகலுக்குள் முடிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் 100 நாள் வேலை பணியாளர்களில் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள், உடல் பிரச்சினை உள்ளவர்கள் இந்த வெப்ப காலங்களில் பணிபுரிவதை தவிர்க்க வேண்டும். மாற்றாக அவர்களுக்கு வெப்ப காலம் முடிந்த பின்பு பணிகள் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, வருவாய் பேரிடர் மேலாண்மைப் பிரிவு தாசில்தார் பாலாஜி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story