தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மின்வாரிய ஊழியர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சமயநல்லூர் மின்கோட்ட அலுவலகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து மின்ஊழியரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாடிப்பட்டி,
மின்வாரிய ஊழியர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சமயநல்லூர் மின்கோட்ட அலுவலகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து மின்ஊழியரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
சமயநல்லூர் மின் கோட்ட செயற்பொறியாளர் கோட்ட அலுவலக வளாகத்தில் அலங்காநல்லூர் மின்பாதை ஆய்வாளர் ராமநாதன், கேங்மேன் சுரேஷ் ஆகியோரையும் மின் பொறியாளர் அலுவலகத்தையும் தாக்கியவர்களை கைது செய்ய கோரி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில பொறுப்பாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம், தொழிலாளர் சம்மேளன சங்கம், அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்புச் சங்கம், அட்டைப்பெட்டி பிரிவு அலுவலர்கள் சங்கம், அ.தி.மு.க தொழிற்சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாடிப்பட்டி, சோழவந்தான், அய்யங்கோட்டை, அலங்காநல்லூர் உள்ளிட்ட 10 கிளை அலுவலகங்களில் இருந்து ஒன்று திரண்டு வந்து ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி, அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
3 பேர் கைது
இதற்கிடையே மின்வாரிய ஊழியர்களை தாக்கியதாக 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.