ஊட்டியில் லாரிகளில் ஆபத்தாக பயணம் செய்யும் தொழிலாளர்கள்-உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஊட்டியில் லாரிகளில் ஆபத்தாக பயணம் செய்யும் தொழிலாளர்கள்- உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஊட்டி
ஊட்டி சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி மற்றும் சரக்கு வாகனங்களில் தொழிலாளர்கள் பயணம் செய்து வந்த நிலையில் தற்போது நகர் பகுதிக்குள்ளும் காய்கறி வாகனங்களில் தொழிலாளர்கள் பயணம் செய்கின்றனர்.
வளைந்து நெளிந்த கொண்டை திருப்பங்களில் வாகனங்கள் செல்வதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், லாரியில் சரக்குகள் மீது அமர்ந்து எந்தவித பிடிமானமும் இல்லாமல் பெண்களும் பயணிப்பதை பார்க்கும்போது பகீரென்று உள்ளது. இதற்கிடையே தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதில் பெரும்பாலானோர் செல்போன் மீது மட்டுமே கவனம் செலுத்தியவாறு அமர்ந்து செல்கின்றனர். சமவெளி பிரதேசமாக இருந்தால் பரவாயில்லை, மழை பிரதேசத்தில் ஒரு லாரியில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் சர்வ சாதாரணமாக செல்கின்றனர். ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சோதனை சாவடிகளை கடக்கும்போது, விதிகளை மீறி இவ்வாறு ஆட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி வருவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் அவ்வாறு வாகனத்தை இயக்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.