வெம்பாக்கம் ஒன்றியத்தில்ஒவ்வொரு வார்டிலும் ரூ.5 லட்சத்தில் பணிகள்
வெம்பாக்கம் ஒன்றியத்தில்ஒவ்வொரு வார்டிலும் ரூ.5 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும் என ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.
செய்யாறு
வெம்பாக்கம் ஒன்றியத்தில்ஒவ்வொரு வார்டிலும் ரூ.5 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும் என ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.
வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் மாமண்டூர் டி.ராஜூ தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் நாகம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகணன், மு.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஒன்றிக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜூ பேசுகையில், ஒவ்வொரு வார்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கழிவு நீர் கால்வாய், நெற்களம் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படைப் பணிகளை ரூ.5 லட்சத்து 5ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளலாம். பணியினை மேற்கொள்ள ஒன்றிய குழு உறுப்பினர்கள் பொறியாளர்களிடம் மனு அளிக்கலாம் என்றார்.
கூட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் காய்கறி மற்றும் பழக்கன்றுகள் உற்பத்தி செய்வதற்கு வெம்பாக்கம் ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 500-ம், நாட்டேரி ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 520-ம். மாத்தூர் ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 524-ம், அரசங்குப்பம் ஊராட்சியில் இரு இடங்களில் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 599-ம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 143 நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு 2023-ம் ஆண்டில் கலெக்டர் உத்தரவின் பேரில், ரூ.320 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் கொள்முதல் செய்தமைக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து நிதி வழங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.