அரசு பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகள்
கரூர் அரசு பள்ளியில் மாணவர்கள் தயாரித்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.
தாந்தோணி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி முதல் கடந்த 8-ந்தேதி வரை முதல் பருவ தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது. மாணவர்கள் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் ஆசிரியர்கள் நாள்தோறும் ஏதேனும் ஒரு செயல் திட்டத்தை, மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பி ஆலோசனை வழங்கினர். இதனை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் உதவியுடன் பல்வேறு வகையான செயல்திட்டங்களை மாணவர்கள் செய்தனர்.
இந்நிலையில் பள்ளி திறந்தவுடன் தங்களது படைப்புகளை மாணவர்கள் கொண்டு வந்திருந்தனர். இதையடுத்து அந்த படைப்புகள் பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்வையிட்டனர். மேலும் வகுப்பு வாரியாக சிறந்த முதல் 3 படைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழும், பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.