ஒர்க்ஷாப் உரிமையாளருக்கு 4 ஆண்டு ஜெயில்
தூத்துக்குடியில் ஒர்க்ஷாப் உரிமையாளருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சாயர்புரம் அருகே டிராவல்ஸ் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய ஒர்க்ஷாப்காரருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
டிராவல்ஸ் தொழில்
சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் லிங்கதுரை. இவர் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் தனது வேனை தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் பகுதியில் 4 சக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வரும் சிவத்தையாபுரத்தை சேர்ந்த பாஸ்கர் என்ற விஜய்பாஸ்கரன் மகன் ஆதித்தன் (44) என்பவரிடம் பழுது பார்ப்பதற்காக விட்டு இருந்தாராம். கடந்த 24.3.2013 அன்று காலையில் லிங்கதுரை தனது வேனை பார்க்க சென்ற போது, அதில் இருந்த அலுமினிய பொருட்கள் காணாமல் போய் இருந்தது. இது குறித்து கேட்ட போது, லிங்கதுரைக்கும், ஆதித்தனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாலையில் லிங்கதுரை தனது மகளுடன் கோவிலுக்கு செல்வதற்காக தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஆதித்தன், அவரது நண்பர் கண்ணன் (42) ஆகிய 2 பேரும் சேர்ந்து லிங்கதுரையிடம் தகராறு செய்தனர். பின்னர் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் லிங்கதுரையை வெட்டி உள்ளனர். அப்போது அருகில் நின்ற அவரது மகள் சுபாலட்சுமிக்கும் காயம் ஏற்பட்டது.
4 ஆண்டு ஜெயில்
இது குறித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்தன், கண்ணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.பிஸ்மிதா, குற்றம் சாட்டப்பட்ட ஆதித்தனுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். கண்ணன் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மாலாதேவி ஆஜர் ஆனார்.