உழவர் உற்பத்தியாளா் நிறுவனங்களில் உலக வங்கி குழுவினர் நேரில் ஆய்வு


உழவர் உற்பத்தியாளா் நிறுவனங்களில் உலக வங்கி குழுவினர் நேரில் ஆய்வு
x

உழவர் உற்பத்தியாளா் நிறுவனங்களில் உலக வங்கி குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

திருச்சி

திருச்சி மாவட்டம், கீழக்குறிச்சியில் கடந்த 2000-ம் ஆண்டு 1,000 விவசாயிகள் தலா ரூ.1,000 முதலீடு செய்து ரூ.10 லட்சத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கினா். இதில் ரூ.6 லட்சத்தை உலக வங்கி அளித்தது. இதேபோல, புள்ளம்பாடியில் 500 விவசாயிகள் தலா ரூ.1,000 வீதம் ரூ.5 லட்சம் முதலீட்டில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கினர். உலக வங்கி ரூ.5 லட்சம் அளித்தது. இதை அடிப்படையாக கொண்டு 2001-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் சார்பில் எண்ணெய் எடுக்கும் எந்திரம், மாவு அரைக்கும் எந்திரங்கள், நிலக்கடலை உரிக்கும் எந்திரங்கள் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு மதிப்புக்கூட்டும் வகையில் பல்வேறு பிரிவுகள் இயங்குகின்றன. மேலும் டிராக்டர், நெல் மாற்று எந்திரம் மற்றும் வைக்கோல் பந்து போடும் எந்திரங்களையும் கொண்டு வேளாண் தொழில்களை மேம்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் கீழக்குறிச்சி, புள்ளம்பாடி உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களை உலக வங்கி அதிகாரிகள் குழுவினா் நேரில் ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தனா். இதில் உலக வங்கியின் அதிகாரிகளான ஜூப் ஸ்டவுட்ஜெஸ்டிக், சஞ்சீத் குமாா், குந்தன்சிங், கிருஷ்ணன், கஜேந்திரபாண்டியன், விஜயராம், திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜாா்ஜ் மெம்மன் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தனா். அப்போது எந்திரங்களை பாா்வையிட்டு நிறுவன பங்குதாரா்களிடமும், விவசாயிகளிடமும் அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தனா். ஆய்வின்போது வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் சரவணன், உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தினா், பங்குதாரா்கள், விவசாயிகள் உடனிருந்தனா்.


Next Story