உலக சுற்றுச்சூழல் தின சைக்கிள் ஊர்வலம்; கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்


உலக சுற்றுச்சூழல் தின சைக்கிள் ஊர்வலம்; கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
x

நெல்லையில் உலக சுற்றுச்சூழல் தின சைக்கிள் ஊர்வலத்தை, கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை உலக சுற்றுச்சூழல் தின சைக்கிள் ஊர்வலத்தை, கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

சைக்கிள் ஊர்வலம்

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று நெல்லையில் இருந்து பாபநாசம் வரை தாமிரபரணி ஆறு பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சைக்கிள் ஊர்வலம் புறப்பட்டது. இதனை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் தாமிரபரணி கரையோர கிராமங்கள் வழியாக பாபநாசத்தை சென்றடைந்தது.

'தூய பொருநை, நெல்லைக்கு பெருமை' என்பதை வலியுறுத்தி நடைபெற்ற ஊர்வலத்தில் புஷ்பலதா பள்ளி, முத்தமிழ் பள்ளி மற்றும் ஜே.ஏ.எம்.எஸ். கல்லூரி மாணவ-மாணவிகள், மற்றும் நெல்லை நேட்சர் கிளப், நெல்லை பை சைக்கிள், செஞ்சிலுவை சங்கம், ஏ ட்ரீ, நெல்லை நீர்வளம் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் தன்னார்வலர்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நந்தவனம் அமைக்கும் பணி

இதுதவிர நெல்லை மாவட்டத்தில் கோடகநல்லூர் மற்றும் பள்ளகால் ஆகிய கிராமங்களில் உள்ள கோவில்களில் நந்தவனம் அமைக்கும் பணியையும் கலெக்டர் விஷ்ணு நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து வீரவநல்லூர் பேரூராட்சி அம்பை ரோட்டில் தட்டைபாறை குளத்தின் கரையில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் 1,100 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிராம உதயம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

மேலும் பாபநாசம் கோவில் பகுதியிலும் சைக்கிள் ஊர்வலம் நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு, தன்னார்வலர்களை பாராட்டினார். அங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பின்னர் கலெக்டர் விஷ்ணு கூறுகையில், "நெல்லை நீர்வள திட்டத்தின் கீழ் நீர் நிலைகளை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 80-க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்பட்டு பாசன வசதிகள் செய்யப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி தண்ணீரை குளிக்கும் தரத்தில் இருந்து குடிக்கும் தரத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

உறுதிமொழி ஏற்பு

மேலும் விக்கிரமசிங்கபுரம் தாய்சினி தியேட்டரில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பது எனது கடமை ஆகும் என்றும், அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்பேன் என்றும் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் இயற்கை ஆர்வலர்களுக்கு குருவிகள் தங்குவதற்கான கூண்டுகளை கலெக்டர் வழங்கினார். மேலச்செவன் சிவன் கோவில் எதிரே அமைந்துள்ள தெப்பக்குளத்தில் நெல்லை உழவாரப்பணி குழுவினர் செய்து வரும் தூர்வாரும் பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

நிகழ்ச்சிகளில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாப், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர், தாசில்தார்கள் செல்வன் (பேரிடர் மேலாண்மை), சண்முகசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், அனந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேசுவரன், பாலசுப்பிரமணியன், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் கண்மணி, பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் சத்தியதாஸ், லோபாமுத்திரை, மாலதி, இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்ராக அலுவலர்கள், கிருஷ்ணவேனி, முருகன், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, பஞ்சாயத்து தலைவர்கள் ராம் சந்துரு, பாலசுப்பிரமணியன் மற்றும் யோக் அமைப்பு, நம் தாமிரபரணி உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story