மாமல்லபுரத்தில் கட்டணமின்றி இலவச அனுமதி; ஒரே நாளில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை


மாமல்லபுரத்தில் கட்டணமின்றி இலவச அனுமதி; ஒரே நாளில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
x

மாமல்லபுரத்தில் கட்டணமின்றி இலவச அனுமதியால் ஒரே நாளில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

செங்கல்பட்டு

உலக பாரம்பரிய வாரம்

இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்துக்கு உலக பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் நுழைவுக்கட்டணம் இன்றி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

மின் விளக்கு வெளிச்சத்தில்

இதனால் கடற்கரை கோவிலுக்கு கூட்டம், கூட்டமாக பயணிகள் வருகை அதிகரித்து இருந்ததால் இரவு 8 மணி வரை பார்வையாளர் நேரம் நீட்டிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்கு பிறகு மின்விளக்கு வெளிச்சத்தில் மிளிர்ந்த கடற்கரை கோவிலின் அழகை கண்டுகளித்த சுற்றுலா பயணிகள், தங்கள் குடும்பத்துடன் அங்கு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

காதல் ஜோடிகள் மின் விளக்கு வெளிச்சத்தில் கடற்கரை கோவில் சிற்பங்களை பின்முகப்பாக கொண்டு செல்பி எடுத்து அதனை தங்கள் சமூக வலைதளங்ககளில் பகிர்ந்து மகிழ்ந்தனர். கடற்கரை கோவில் வளாகத்தில் இரவு 7 மணிக்கு மேல் குளிர் அதிகமாக வாட்டி வதைத்ததால் குழந்தைகளுடன் வந்த சுற்றுலா பயணிகள் சிலர் மின் விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்த கடற்கரை கோவில் சிற்பங்களை அவசர, அவசரமாக சுற்றி பார்த்துவிட்டு சென்றதையும் காண முடிந்தது.

20 ஆயிரம் பேர்

நுழைவு வாயில் கதவு மூடப்பட்டு 8 மணிக்கு பிறகும் கூட்டம், கூட்டமாக வந்த சுற்றுலா பயணிகள் யாரும் கடற்கரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்னும் கூடுதலாக இரவு 9 மணி நேரம் வரை திறந்திருக்கலாம் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றதை காண முடிந்தது.

நேற்று முன்தினம் பார்வையாளர் இலவச அனுமதியால் ஒரே நாளில் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் என மொத்தம் 20 ஆயிரம் பேர் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளித்து விட்டு சென்றதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.


Next Story