விழுப்புரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழா நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கலெக்டர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் அரசு அலுவலர்கள், நர்சிங் மாணவிகள், நேரு யுவகேந்திரா அமைப்பினர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறுகுடும்ப நெறி, திருமணத்திற்கேற்ற வயது, இளம்வயது திருமணத்தை தவிர்ப்பீர், பெண் சிசுக்கொலையை தடுத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மாணவி மயக்கம்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் சண்முகக்கனி, குடும்ப நலத்துறை துணை இயக்குனர் மணிமேகலை, மருத்துவக்கல்லூரி நிலைய மருத்துவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பேரணி தொடங்கும்போது மாணவி ஒருவர், திடீரென மயங்கி விழுந்தார். உடனே அரசு அதிகாரிகள், அந்த மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி அளித்தனர். அதன் பிறகு அம்மாணவி வீடு திரும்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






