தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் லட்ச தீபங்கள் ஏற்றி வழிபாடு
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் லட்ச தீப வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை லட்ச தீப வழிபாடு நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில் பெருமாளின் சங்கு, சக்கரம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கார்த்திகை தீப விளக்குகள் அடுக்கப்பட்டன. நேற்று மாலை 5½ மணி அளவில் திருக்கோடி தீபம் உற்சவருடன் கோவில் சன்னதியில் இருந்து புறப்பட்டது. கோவிலின் மூல சன்னதியில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டவுடன் கோவில் மணி ஒலிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து பக்தர்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த கார்த்திகை தீப விளக்குகளில் விளக்குகளை ஏற்றினர். பல்வேறு வடிவங்களில் கோலங்கள் அமைத்து, அதில் கார்த்திகை தீப விளக்குகள் ஏற்றப்பட்டன. இதனால் கோவில் வளாகம் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது.
இதன் தொடர்ச்சியாக சவுந்தரராஜ பெருமாள் கோவில் முன்பு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்று பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ராஜகோபுரம் அருகே, சவுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பிறகு பெருமாள் தேரடியில் எழுந்தருளினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொளுத்தப்பட்டது. லட்ச தீப வழிபாடு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.