ஜல்லிக்கட்டு காளைகள் மீது தீர்த்தம் தெளித்து வழிபாடு
ஜல்லிக்கட்டு காளைகள் மீது தீர்த்தம் தெளித்து வழிபாடு நடந்தது.
வையம்பட்டி:
வையம்பட்டியை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கென சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்திருந்தனர். திருப்பலிக்கு பின்னர் பங்குத்தந்தை, ஜல்லிகட்டு காளைகள் மீது புனித நீர் தெளித்து மந்திரித்தார். வழிபாடு முடிந்த நிலையில் வெளியே வந்த காளைகளை கண்டு வாலிபர்கள் உற்சாகமாகி ஆரவாரம் செய்தனர். இதனால் அந்த இடமே ஜல்லிக்கட்டு நடைபெறுவதை போல காணப்பட்டது. இருப்பினும் காளை வளர்ப்பாளர்கள், காளைகளை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்து அழைத்து சென்றனர்.
இதேபோல் பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலயத்தில் நாடு செழித்து பருவ மழை பெய்து மக்கள் சுபிட்சமாக நோய்நொடியின்றி வாழ்ந்திட வேண்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மந்திரிப்பு செய்யப்பட்டு புனித தீர்த்தம் தெளித்து ஆசிர்வாதம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் இருந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் தங்கள் காளைகளை குளிப்பாட்டி அலங்கரித்து ஆலயத்திற்கு முன் அழைத்து வந்திருந்தனர். இதையடுத்து மந்திரிப்பு செய்து காளைகள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்ட பின்னர் அனைவரும் ஜல்லிக்கட்டு காளைகளை மீண்டும் அழைத்துச் சென்றனர். சிறுவர்களும், பெண்களும் ஜல்லிக்கட்டு காளைகளை ஆர்வமாக பிடித்து வந்திருந்தனர். இதைத்தொடர்ந்து சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.