திருவாரூர் கமலாலய குளத்தில் பெண்கள் குடும்பத்துடன் வழிபாடு


திருவாரூர் கமலாலய குளத்தில் பெண்கள் குடும்பத்துடன் வழிபாடு
x

திருவாரூர் கமலாலய குளத்தில் பெண்கள் குடும்பத்துடன் வழிபாடு

திருவாரூர்

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் பெண்கள் குடும்பத்துடன் வழிபட்டனர். அப்போது படையலிட்டு தீபம் ஏற்றினர்.

ஆடிப்பெருக்கு விழா

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டம் உணவு உற்பத்தியில் முதன்மை இடத்தை பிடித்து வருகிறது. இங்கு பெரும்பாலும் நெல்சாகுபடி மட்டுமே செய்து வரும் நிலையில் ஆழ்குழாய் பாசனம் என்பது மிக குறைவான இடங்களில் செய்யப்படுகிறது. பெரும் பகுதி ஆற்றுநீரை நம்பி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்து வரும் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த ஆண்டு முன்னதாக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் அனைத்து ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் செல்கிறது.

படையலிட்டு தீபம் ஏற்றி வழிபாடு

நேற்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தின் கரைகளில் காலை முதலே பெண்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது படிக்கட்டுகளில் மஞ்சளில் பிள்ளையார் உருவம் செய்து வைத்து காதோலை கருகமணியுடன் பேரிக்காய், கொய்யா, ஆப்பிள், விளாம்பழம் மற்றும் வாழைப்பழம், வெல்லம் கலந்த அரிசி ஆகியவற்றை படையலிட்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

பின்னர் பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். கிராமப்புற பெண்கள் அந்தந்த பகுதி ஆற்றின் கரையில் திரண்டனர். அங்கு படையலிட்டு சூரியனை வழிபட்டனர்.

கோலாகல கொண்டாட்டம்

மேலும் குளம், நீர் நிலைகள், மோட்டார் பம்பு செட்டுகள் ஆகிய இடங்களில் பெண்கள் படையலிட்டு வணங்கினர். அதேபோல் வீடுகளில் அடி பைப்புகள், தண்ணீர் குழாய்களில் மாலை அணிவித்து வழிபட்டனர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாவட்டம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நீடாமங்கலம்

ஆடிப்பெருக்கு விழா நீடாமங்கலம் பகுதியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மூணாறு தலைப்பு, வெண்ணாறு, கோரையாறு, பாமனியாறு ஆகிய ஆறுகளின் படித்துறைகளில் திரளான பெண்கள் புனித நீராடி புத்தாடைகள் அணிந்து தங்கள் குடும்பத்தினருடன் பூஜைகள் செய்து காவிரித்தாயை போற்றி வணங்கினர். புதுமணத்தம்பதிகள் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். மேலும் ஆற்றங்கரைகளில் எழுந்தருளியுள்ள விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் பெண்கள் வழிபாடு நடத்தினர். குழந்தைகள் சப்பரம் இழுத்து மகிழ்ந்தனர். உழவர்களுக்கும் உகந்த நாள் ஆடிப்பதினெட்டு என்பதால் விவசாயிகள் உழவுத்தொழிலை மேற்கொண்டனர். நீடாமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மன்னார்குடி

நேற்று ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் ஆறுகளின் கரைகளில் குழுமி ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடினர். புதுமண தம்பதிகள் தங்களது மங்கள நாணை மாற்றி வழிபாடு செய்தனர். மன்னார்குடி ராஜகோபாலசாமிக்கு ஆடிப்பெருக்கையொட்டி பாமணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. கீழப்பாலம் கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள படித்துறையில் ராஜகோபாலசாமி ராஜஅலங்காரத்தில் ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜகோபாலசாமியை வழிபாடு செய்தனர்.


Next Story