பொதுமக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு


பொதுமக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு
x

சேலத்தில் கார்த்திகை தீப திருவிழாைவையொட்டி பொதுமக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டன.

சேலம்

சேலத்தில் கார்த்திகை தீப திருவிழாைவையொட்டி பொதுமக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டன.

கார்த்திகை தீபத்திருவிழா

சேலத்தில் நேற்று கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சேலம் பெரமனூர், நாராயணபிள்ளை தெரு, 20 அடி ரோடு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வைத்தனர்.

அதே போன்று மாநகர் பகுதியில் உள்ள ஏராளமான பகுதிகளில் பொதுமக்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து வீடுகளில் கொழுக்கட்டை தயார் செய்து சாமிக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.

சுகவனேசுவரர் கோவில்

அதேபோன்று கோவில்களிலும் கார்த்திகை தீபத்தையொட்டி கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நேற்று காலை சிவன், சொர்ணாம்பிகை, முருகன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. நடராஜருக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இரவு கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் நேற்று கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கோவில் முன்பு தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

காளியம்மன் கோவில்

சேலம் ரத்தினசாமிபுரம் காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இரவு அங்குள்ள விநாயகர், காளியம்மன் சன்னதி முன்பு கூம்பு தீபம் ஏற்றப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.இதேபோன்று உத்தமசோழபுரத்தில் கரபுரநாதர் கோவில், உடையாப்பட்டி கந்தாஸ்ரமம், ஊத்துமலை, குமரகிரி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

ஆத்மலிங்கேஸ்வரர் கோவில்

சின்னகொல்லப்பட்டி அய்யன் மலையில் ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா, கோவில் 15-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அனந்தநாயகி சமேத ஆத்மலிங்கேஸ்வரர் உற்சவ மூர்த்தி கிரிவலப்பாதையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலை கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆத்மலிங்கேஸ்வரர் கோவில் அறக்கட்டளை நிர்வாகி பன்னீர் செல்வம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Next Story