தலைவாசல் அருகேவேன் கவிழ்ந்து 25 பக்தர்கள் காயம்மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற போது விபத்து


தலைவாசல் அருகேவேன் கவிழ்ந்து 25 பக்தர்கள் காயம்மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற போது விபத்து
x
சேலம்

தலைவாசல்:

தலைவாசல் அருகே வேன் கவிழ்ந்து 25 பக்தர்கள் காயம் அடைந்தனர். மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.

சுற்றுலா வேன்

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த 25 பேர் நேற்று ஒரு வேனில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த வேனை சரவணம்பட்டியை சேர்ந்த குமார் (வயது 31) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வேன் காலை 7 மணி அளவில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த பக்தர்கள் காயம் அடைந்து அபய குரல் எழுப்பினர்.

காயம்

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தலைவாசல் போலீசார் படுகாயம் அடைந்த 3 பெண்களை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் காயம் அடைந்த சரவணம்பட்டியை சேர்ந்த தருண் (19), பாரதி (43), லதா (23), வளர்மதி (45), முத்துலட்சுமி (33), ரேவதி (34), தர்ஷினி (13), சிவக்குமார் (14), பல்லவி (35), சுப்பிரமணி (76) உள்பட 12 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் பள்ளி வேன்களில் அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும் லேசான காயம் அடைந்த 10 பேர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று திரும்பினர். இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story