எழுத்தாளர் பத்ரிசேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன்


எழுத்தாளர் பத்ரிசேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன்
x

எழுத்தாளர் பத்ரிசேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

பெரம்பலூர்

குன்னம்:

எழுத்தாளர் கைது

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் பத்ரிநாராயணன் என்ற பத்ரிசேஷாத்ரி (வயது 53). பிரபல எழுத்தாளரும், பதிப்பாளருமான இவர் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசும்போது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை அவமதிக்கும் வகையில் அவதூறாக பேசியதாகவும் கூறி பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள காடூர் கிராமத்தை சேர்ந்த வக்கீல் கவியரசு குன்னம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் குன்னம் போலீசார் பத்ரிசேஷாத்ரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் அவரை கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து அவரை பெரம்பலூர் அழைத்து வந்து, குன்னத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கவிதா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி கவிதா, பத்ரிசேஷாத்ரியை வருகின்ற 11-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி பத்ரிசேஷாத்ரி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நிபந்தனை ஜாமீன்

இந்நிலையில் நேற்று முன் தினம் பத்ரிசேஷாத்ரி ஜாமீன் கேட்டு குன்னம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதேபோல் குன்னம் போலீசார், பத்ரிசேஷாத்ரியை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த 2 மனுக்களும் நேற்று நீதிபதி கவிதா முன்பு விசாரணைக்கு வந்தது.

முதலில் போலீஸ் காவல் கேட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கவிதா, போலீஸ் காவல் தேவை இல்லை என்றும், அதற்கான முகாந்திரம் இல்லை என்றும் கூறி போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, பத்ரிசேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட...

இதில், எழுத்தாளர் பத்ரிசேஷாத்ரி தினமும் திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் 15 நாட்களுக்கு காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அரசியல் மற்றும் நீதித்துறை சார்பாக கருத்து எதுவும் தெரிவிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டது. முன்னதாக திருச்சி மத்திய சிறையில் இருந்து பத்ரி சேஷாத்ரியை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், விசாரணை முடிந்ததும் மீண்டும் அவரை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தண்டபாணி ஆஜரானார். எழுத்தாளர் பத்ரிசேஷாத்ரியை ஜாமீனில் எடுப்பதற்காக சென்னை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் வந்திருந்தனர். அதில் பத்ரி சேஷாத்ரி தரப்பில் ஐகோர்ட்டு வக்கீல் எம்.ஆர்.வெங்கடேஷ் ஆஜரானார். இதனால் குன்னம் கோர்ட்டு பரபரப்பாக காணப்பட்டது.


Next Story