கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 2 ஆயிரத்து 25 பேர் எழுதினர்
சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 2 ஆயிரத்து 25 பேர் எழுதினர். 1008 பேர் தேர்வு எழுத வரவில்லை.
சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 2 ஆயிரத்து 25 பேர் எழுதினர். 1008 பேர் தேர்வு எழுத வரவில்லை.
கிராம உதவியாளர் பணி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த மாதம் 7-ந் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த பணியிடத்திற்கு மாவட்டம் முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்து 48 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதில் 3 ஆயிரத்து 33 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 ஆயிரத்து 25 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினர். 1008 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்த பணியிடங்களுக்கான தேர்வு நேற்று மாவட்டத்தில் சிவகங்கை அரசு மன்னர் மேல்நிலைப்பள்ளியிலும், மானாமதுரை செய்களத்தூர் காமாட்சியம்மன் பொறியியல் கல்லூரியிலும், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியிலும், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், காளையார்கோவில் புனித மைக்கேல் கல்லூரியிலும், திருப்பத்தூர் புதுகாட்டாம்பூர் பிளாசா மேல்நிலைப்பள்ளியிலும், காரைக்குடி அழகப்பா மாடல் மேல்நிலைப்பள்ளியிலும், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியிலும், சிங்கம்புணரி ஆர்.எம்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த தேர்வு காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. முதல் அரை மணி நேரம் தமிழ் மொழிக்கான எழுத்து திறனறிவு தேர்வும், அடுத்த அரை மணி நேரம் ஆங்கில மொழிக்கான எழுத்து திறனறிவு தேர்வும் நடைபெற்றது. முன்னதாக தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு வந்த தேர்வர்களை தீவிர சோதனை செய்யப்பட்டு ஹால்டிக்கெட்டுடன் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் அவர்களின் செல்போன்கள் மற்றும் இதர பொருட்கள் ஓரிடத்தில் மொத்தமாக வைக்கப்பட்டது. தேர்வு எழுதும் இடத்திற்கு கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதையொட்டி தேர்வு எழுதும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.