2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு


2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 13 ஆயிரத்து 547 பேர் எழுதினர்

விழுப்புரம்

விழுப்புரம்

எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், அரசூர், மயிலம், உள்ளிட்ட 11 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

வடக்குமண்டல ஐ.ஜி.

விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் நடந்த எழுத்து தேர்வை பார்வையிட்ட வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.கண்ணன் தேர்வு மையத்தில் குடிநீர், கழிவறை, மின்சாரம், காற்றோட்டமான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று பார்வையிட்டார். அப்போது விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால், துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

13,547 பேர் எழுதினர்

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இதில் விண்ணப்பித்த 15 ஆயிரத்து 670 பேரில் 13 ஆயிரத்து 547 பேர் தேர்வு எழுதினர். 2,123 பேர் தேர்வு எழுத வரவில்லை.

சில பெண்கள் தங்கள் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்தனர். அவர்களது குழந்தையை தேர்வு மைய வளாகத்தில் உறவினர்கள் கவனித்தனர். முன்னதாக தேர்வு எழுத வந்தவர்கள் அனைவரும் தேர்வு மையத்தின் நுழைவு வாசலில் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டர். தேர்வு கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story