பழனி முருகன் கோவிலில் யாக பூஜை


பழனி முருகன் கோவிலில் யாக பூஜை
x

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் நேற்று 2-ம், 3-ம் கால யாகபூஜை நடந்தது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில்

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த மாதம் 25-ந்தேதி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டு யாகசாலை அமைக்கும் பணி தொடங்கியது.

இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகள், கோபுரங்களுக்கும் கலச ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. 21-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கஜ, பரி, ஆநிரை பூஜைகள், மிராஸ் பண்டாரத்தார் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

சிறப்பு வழிபாடு

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜைக்கு சூரிய கதிரில் இருந்து அக்னி எடுத்தல், யாகசாலையில் இடுதல் ஆகியவை நடைபெற்றது. அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு மூலவர் மற்றும் அனைத்து தெய்வ சன்னதிகளிலும் கலசத்தில் அருட்சக்தி கொணர்தல் நடந்தது.

பின்னர் சக்தி கலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதற்கால யாகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் உருவத்துக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் திருமறை, கட்டியம், கந்தபுராணம், கந்தர் அலங்காரம் பாடி வழிபட்டனர்.

2-ம் கால யாகம்

இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு மங்கல இசையுடன் 2-ம் கால யாகபூஜை தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாகுதி, கணபதி பூஜை, கலசபூஜை நடைபெற்றது. பின் சிவாச்சாரியார்கள், பக்தர்களால் திருப்புகழ், திருமுறை பாடப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் ஐந்திருக்கை ஐந்து சுற்று பூஜை, ஐந்து மந்திர ஆறங்க யாகம் நடந்தது. அதையடுத்து மூலிகை பொருட்கள், விதை, வேர், தண்டு, இலை, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள், அறுவகை சோறு, பலகாரம், சுண்டல், பாயாசம், பால், தயிர், தேன், நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் நடந்தது.

பின்னர் கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை, மலர்களை கொண்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அப்போது கந்தபுராணம், திருமுறை, கந்தர்அனுபூதி பாடினர்.

3-ம் கால யாகபூஜை

அதையடுத்து நேற்று மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகபூஜை தொடங்கியது. அப்போது மூலிகைகள், வாசனை திரவியங்கள், தேன், இலை, தண்டு உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

பின்னர் இரவு 8.30 மணிக்கு 3-ம் கால யாகம் நிறைவு பெற்று தீபாராதனை, மலர் வழிபாடு, கட்டியம், கந்தபுராணம், திருமுறை, முருகன் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டது. முடிவில் நெய்வேத்தியம், தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story