நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்தது


நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்தது
x

பஞ்சு விலை குறைந்து வருவதால் பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

திருப்பூர்

பஞ்சு விலை குறைந்து வருவதால் பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

பின்னலாடை தொழில் முடக்கம்

பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் விளங்கி வருகிறது. கடந்த 18 மாதங்களில் அபரிமிதமாக உயர்ந்த நூல் விலையால் பனியன் தொழில் முடங்கியுள்ளது. இதன் காரணமாக புதிய ஆர்டர்கள் எடுக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகிறார்கள். மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டங்கள், வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தினார்கள். ஆனால் ஏற்றுமதிக்கான தடை குறித்து மத்திய அரசு அறிவிக்கவில்லை. வழக்கமாக நூல் விலையை மாதத்தின் முதல் நாளில் நூற்பாலை உரிமையாளர்கள் அறிவிப்பார்கள். கடந்த ஏப்ரல் மாதம் ரூ.30-ம், மே மாதம் ரூ.40-ம் ஒரே அடியாக அதிகரித்தது. இது பின்னலாடை உற்பத்தியாளர்களை பெரிதும் பாதித்தது. இந்த தொழிலை தொடர்ந்து செய்ய முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது. பலர் ஆடை உற்பத்தியை தாங்களாகவே நிறுத்திக் கொண்டனர்.

இறக்குமதி வரி நீக்கம்

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் 2 நாள் உற்பத்தி நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி மத்திய அரசிடம் தொடர்ந்து முறையிட்டனர். பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீத வரியை வருகிற செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட நூல் விலையில் மாற்றம் இல்லை. மே மாத நூல் விலை அப்படியே தொடர்வதாக நூற்பாலை சங்கத்தினர் அறிவித்தனர்.

நூல் விலை குறையும் என்று உற்பத்தியாளர்கள் காத்திருந்த நிலையில், நூல் விலையில் மாற்றமில்லை என்று அறிவித்தது பனியன் உற்பத்தியாளர்களுக்கு சற்று நிம்மதியை அளித்திருந்தது. இருப்பினும், பஞ்சு வியாபாரிகளிடம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பஞ்சை வெளியே கொண்டு வந்து, யூக பேர வணிகத்திலிருந்து பஞ்சை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயலும், தேவைக்கு அதிகம் உள்ள பஞ்சை பதுக்கி வைக்கக்கூடாது என்று பஞ்சு வியாபாரிகளிடம் எச்சரிக்கை விடுத்தார். அதன் பிறகு கடந்த மாதம் பஞ்சு விலை குறைய தொடங்கியது. இதன் காரணமாக சில நூற்பாலைகள் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை நூல் விலையை குறைத்து வழங்கினர்.

நூல் விலை கிலோ ரூ.40 குறைந்தது

இந்த நிலையில் இந்த மாதத்துக்கான நூல் விலை நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் நூல் விலையை கிலோவுக்கு ரூ‌.40 குறைத்து நூற்பாலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி வரி நீங்கலாக 20-ம் நம்பர் நூல் கோம்டு ரகம் ரூ.362, 24-ம் நம்பர் நூல் ரூ.372, 30-ம் நம்பர் நூல் ரூ.382, 34-ம் நம்பர் நூல் ரூ.397, 40-ம் நம்பர் நூல் ரூ.417-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல் செமி கோம்பு ரக நூல், கோம்டு ரக நூலில் இருந்து கிலோவுக்கு ரூ.10 குறைத்து அறிவிக்கப்பட்டது.

இது பனியன் உற்பத்தியாளர்களுக்கு ஆறுதல் அளித்தாலும், கிலோவுக்கு மேலும் ரூ.30 குறைத்து, கடந்த மார்ச் மாத விலையில் நூலை நூற்பாலைகள் வழங்கினால் புதிய ஆடர்களை தைரியமாக எடுத்து செய்ய முடியும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Related Tags :
Next Story