குறுவை சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் குறித்து வேளாண் இணை இயக்குனர் சேகர் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் குறித்து வேளாண் இணை இயக்குனர் சேகர் ஆய்வு செய்தார்.
மஞ்சள் நோய் தாக்குதல்
காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் ஏப்ரல் மாத இறுதியில் விதைவிட்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ளனர். சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தற்போது நன்குவளர்ந்து தண்டு உருளும் பருவத்தில் உள்ளது.
குறுவை சாகுபடிக்கு ஏற்ற ஆடுதுறை 43, ஆடுதுறை 50, ஏ.எஸ்.டி. 16., டி.பி.எஸ். 5 போன்ற நெல் ரகங்களை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களில் மஞ்சள் நோய் எனப்படும் செம்பேன் நோய் தாக்குதல் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
விவசாயிகள் வேதனை
வேளாண்துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் மருந்தினை பயிர்களுக்கு தெளித்தாலும் மஞ்சள் நோய் கட்டுப்படுவதில்லை. இதனால், பயிரை அறுவடை செய்யும்போது மகசூல் பாதியாக குறையும் என்று வேதனை தெரிவித்த விவசாயிகள் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தலைமையில் அதிகாரிகள் மயிலாடுதுறை அருகே உள்ள பொன்னூர், ஆனந்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் நோய் தாக்கிய நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உத்தரவு
இதுகுறித்து இணை இயக்குனர் சேகர் நிருபர்களிடம் கூறுகையில், 'ஏ.எஸ்.டி. 16, டி.பி.எஸ். 5 உள்ளிட்ட சில ரகங்களில் குருத்துப்பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது. சில விவசாயிகள் வேளாண்மைத் துறையினரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை பயன்படுத்தி இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த களஅலுவலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து உரிய மருந்துகளை பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் வேளாண்மைத்துறையினர் பரிந்துரைக்கும் மருந்துகளை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். மேலும் மயிலாடுதுறை வட்டாரத்துக்கு நியமிக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி பாதிக்கப்பட்ட பயிர்களை களஆய்வு செய்து பூச்சி தாக்குதலுக்கான காரணங்களை கண்டறிந்து தீர்வு ஏறபடுத்தி தருவார்' என்றார்.