கோடை விழா 3-வது நாள்: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்-செல்லப்பிராணிகள் கண்காட்சி இன்று நடக்கிறது


கோடை விழா 3-வது நாள்: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்-செல்லப்பிராணிகள் கண்காட்சி இன்று நடக்கிறது
x

ஏற்காடு கோடை விழா 3-வது நாளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி நடக்கிறது.

சேலம்

ஏற்காடு:

ஏற்காடு கோடை விழா 3-வது நாளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி நடக்கிறது.

கோடை விழா

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா- மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 25-ந் தேதி ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது.

மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண பூக்கள் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் ரோஜாக்களால் மேட்டூர் அணை, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட மாட்டு வண்டி, ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், சின்சான் கார்ட்டூன், வண்ணத்துப்பூச்சி மலர் அலங்காரத்துடன் செல்பி ஸ்பாட் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

விற்பனை படுஜோர்

இந்த நிலையில் கண்காட்சியின் 3-வது நாளான நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்ததை காணமுடிந்தது. அவர்கள் அண்ணா பூங்காவில் குவிந்தனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சாலையோரங்களில் கயிறு கட்டப்பட்டு வாகனம் நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனத்தை நிறுத்த முடியாமல் அவதியடைந்தனர்.

மேலும் அங்குள்ள படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். பின்னர் அவர்கள் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகளில் விற்பனை படுஜோராக நடந்தது. சுற்றுலா பயணிகள் செல்லும் இடமெல்லாம் செல்போன்களில் செல்பி எடுத்து கொண்டனர்.

ஒருவழி பாதை

இதனிடையே மாலையில் ஏற்காடு- சேலம் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு குப்பனூர் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் விளையாட்டு துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

செல்லப்பிராணிகள் கண்காட்சி

சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கு எண்.27-ல் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பெட் ஷோ என்ற பெயரில் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் கிளி, பறவைகள், பூனைகள் மற்றும் அல்சேசன், பொமரேனியன், ஜெர்மன் செப்பார்டு, டாபர்மேன், லேபர்டார், பக், புல்டாக், பாக்சர், காக்கர் ஸ்பேனில் டேசன்ட் போன்ற வெளிநாட்டு இன நாய்களும், ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை போன்ற நாட்டின நாய்களும் கலந்து கொள்ள உள்ளன.

இதில் போலீஸ் துறையை சேர்ந்த நாய்களுக்கான கீழ்படிதல், சாகச காட்சிகள் இடம்பெற உள்ளன. இந்த கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த செல்லப்பிராணிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

கோடை விழாவில் இன்று

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி கலையரங்கத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

காலை 7 மணி : மலை ஏறும் நடைபயணம்.

10 மணி : இளைஞர்களுக்கான கபடி போட்டி

10.30 மணி : பெண்களுக்கான கோலப்போட்டி

மற்றும் விளையாட்டு போட்டிகள்.

11 மணி : கிராமிய கலை நிகழ்ச்சி.

12.30 மணி : மேஜிக் ஷோ.

3 மணி : கலை நிகழ்ச்சி



Next Story