நோய் தாக்குதலால் தென்னையில் விளைச்சல் பாதிப்பு


நோய் தாக்குதலால் தென்னையில் விளைச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2023 7:30 PM GMT (Updated: 25 Jun 2023 7:30 PM GMT)

பொள்ளாச்சி, ஆனைமலையில் நோய் தாக்குதலால் தென்னையில் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் 1½ லட்சம் இளநீர் மட்டுமே பறிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

பொள்ளாச்சி, ஆனைமலையில் நோய் தாக்குதலால் தென்னையில் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் 1½ லட்சம் இளநீர் மட்டுமே பறிக்கப்படுகிறது.

தென்னை விவசாயம்

ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய 3 தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் 55 ஆயிரம் ஏக்கர் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து தினமும் மதுரை, சென்னை, திண்டுக்கல் உள்பட வெளிமாவட்டங்கள் மற்றும் மராட்டியம், அசாம், அரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்பட வெளிமாநிலங்களுக்கு இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக பச்சை மற்றும் செவ்விளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தினமும் 5 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது தினமும் 1½ லட்சம் இளநீர் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு காரணம், நோய் தாக்குதல் மற்றும் வறட்சியால் தென்னையில் மகசூல் குறைந்ததே ஆகும்.

நோய் தாக்குதல்

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பருவமழை சரிவர பெய்யாததால், வறட்சி ஏற்பட்டு தென்னையில் குரும்பைகள் உதிர்ந்து விடுகிறது. மேலும் கேரள வேர் வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக 60 சதவீதம் விளைச்சல் குறைந்துவிட்டது. இதனால் தேவை அதிகரித்து உள்ளது. மேலும் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு இளநீர் ரூ.22 முதல் ரூ.28 வரை விற்பனையானது. தற்போது ஒரு இளநீர் ரூ.35 வரை விற்கப்படுகிறது என்றனர்.

விளைச்சலை அதிகரிக்க வேண்டும்

இளநீர் சங்க ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், பருவமழை காலங்களில் தினமும் 5 லட்சம் இளநீர் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோடைகாலங்களில் 2 முதல் 3 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தென்னையில் நோய் தாக்குதல், வறட்சி காரணமாக 1½ லட்சம் இளநீர் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் செவ்விளநீர் மற்றும் பச்சை இளநீர் 1 லட்சத்து 25 ஆயிரமும், நாட்டு இளநீர் 25 ஆயிரமும் ஆகும். இளநீருக்கு தேவை இருந்தும் வரத்து இல்லை. இதனால் விளைச்சலை அதிகரிக்க விவசாயிகள் முயற்சிக்க வேண்டும் என்றார்.


Next Story