நோய் தாக்குதலால் பருத்தியில் மகசூல் பாதிப்பு


நோய் தாக்குதலால் பருத்தியில் மகசூல் பாதிப்பு
x

வத்திராயிருப்பு பகுதியில் நோய் தாக்குதலால் பருத்தியில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதியில் நோய் தாக்குதலால் பருத்தியில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பருத்தி சாகுபடி

வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், கோட்டையூர், இலந்தைகுளம், தம்பிபட்டி, சேஷபுரம், வ.மீனாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பருத்தி செடியில் வேர் நோய் தாக்கியதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர். எனவே இந்த நோயினை கட்டுப்படுத்த செடியின் வேர் பகுதியில் அதற்கு தகுந்த உரங்கள் கொடுத்தும் இந்த நோய் கட்டுப்படுவதில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

வேர் நோய்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு பகுதியில் தற்போது பருத்தி விளைந்து மகசூல் எடுக்கும் நிலையில் இந்த வேர் நோயினால் மகசூல் குறைந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.40 முதல் ரூ.45 ஆயிரம் வரை செலவு செய்தோம். இதனால் தங்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை. தற்போது மகசூல் குறைந்து உள்ள நிலையில் வேலை ஆட்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பருத்தி கிலோ ரூ.100-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு நோய் தாக்கத்தாலும் மகசூல் குறைவாலும் கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். தற்போது இப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பருத்தி செடியிலேயே இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story