யோகாவை தனி பாடமாக கொண்டு வரவேண்டும் - புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்


யோகாவை தனி பாடமாக கொண்டு வரவேண்டும் - புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
x

யோகாவை தனி பாடமாக கொண்டு வரவேண்டும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

மத்திய கப்பல் துறையின் கீழ் இயங்கும் லைட்ஹவுஸ் இயக்குனரகம் சார்பில் புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் தமிழிசை உலக யோகா தினத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

வீட்டில் நாம் இருக்கும் இடத்தில் சிறிய யோக கலையை கற்றுக்கொள்ளலாம். உடல் நலம், மன நலத்துக்கும் யோகாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நோய்களை தீவிரப்படுத்தாமல் யோகா பதப்படுத்தும். பல பண்டிகைகளை கொண்டாடுவதுபோல உடல்நல, மனநல விழாவாக யோகா திருவிழாவும் கொண்டாடும் வாய்ப்பு உள்ளது.

மருத்துவ ரீதியில் குழந்தைகளுக்கு 5 வயதில் இருந்து யோகா கற்றுத்தரலாம். குழந்தைகளின் வளர்ப்பில் திட்டமிடும் பெற்றோர் 5 வயதில் யோகாவையும் கற்றுத்தர வேண்டும் என்ற சபதத்தை ஏற்க வேண்டும். எந்த வயதுக்காரர்களாக இருந்தாலும் யோகா கற்றுக்கொள்ளலாம். 2 மாநில கவர்னராக இருந்தாலும் எனக்கு யோகா செய்ய ஒரு மணி நேரம் கிடைக்கிறது. எனவே மாணவர்களும் நேரம் ஒதுக்கி யோகா செய்ய வேண்டும். எவ்வளவு சவால்களாக இருந்தாலும் யோகா நம் மனதையும், உடலையும் பலப்படுத்தி காப்பாற்றும்.

ஜூன் 21-ந் தேதி தான் ஒரு ஆண்டில் அதிக அளவு பகலை கொண்டுள்ள நாள். அதனால்தான் யோகா தினம் அன்று கொண்டாடப்படுகிறது. யோக கலையோடு இறை உணர்வும் கலந்துள்ளது. அனைத்து பள்ளிகலும் யோகாவை தனி பாடமாக கொண்டு வர வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு யோகா கற்றுக்கொடுப்பது நல்லது. மாணவர்கள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும். யோகாவில் ஈடுபட்டால் மனதை ஒருநிலைப்படுத்தி மனப்பாடம் செய்து படிக்க முடியும். பாடங்களில் தேர்ச்சி பெற முடியும். யோகா வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அனைத்து சந்தர்ப்பங்களையும் வழங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story