வாழ்க்கையில் உயர்ந்தநிலையை அடையலாம்
வாழ்க்கையில் உயர்ந்தநிலையை அடையலாம்
கோவை
திறனை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கையில் உயர்ந்தநிலையை அடையலாம் என்று கலந்துரையாடலில் தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசினார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அறிவியல் மாணவர்கள் அனைவரும் தங்களின் அறிவுத்திறன் மூலம் உலக அளவில் விஞ்ஞானப்பூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த ஆராய்ச்சி இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். மாணவர்கள் தங்களின் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம். மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நாளிதழ்களை நன்கு படிக்க வேண்டும். மிகுந்த ஆர்வத்துடன் படிக்க வேண்டும்.
பொது அறிவு அவசியம்
மொழிகளை எழுதவும், படிக்கவும், நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். பொது அறிவு மிகவும் அவசியம். வானிலை மாற்றம் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பு என்ன? என்பதை கேட்டு அவர்களின் ஆசைப்படி படித்து வாழ்வில் உயரலாம். பேராசிரியர்கள் பாடம் நடத்தும்போது மாணவர்களின் பயத்தை போக்கும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்தால் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
நானும் இதே பல்கலைக்கழத்தில் தான் படித்தேன். நான் படிக்கும்போது கல்லூரியில் நடந்த நடனப்போட்டியில் ரிங் நடனம் ஆடி முதல் பரிசு பெற்றேன். இது என்னால் மறக்கமுடியாதது.
இவ்வாறு அவர் பேசினார்.
கேள்விகள்
அப்போது அவரின் பேச்சுக்கு இடையே பல்வேறு துறைகளில் இளம் வயதினர், சிறுவர்கள் சாதித்து வருவதை வீடியோவாக திரையில் ஒளிபரப்பு செய்து விளக்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகள், டி.ஜி.பி.சைலேந்திரபாபுவிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு கலந்துரையாடல் நடந்தது.
இதில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு பாடம் நடத்திய ஆசிரியரும், வேளாண்மை முன்னாள் முதன்மையருமான கிருஷ்ணமூர்த்தி, மாணவர்நல மைய முதன்மையர் மரகதம், உள்பட பலர் கலந்துகொண்டனர்.