கடனுதவியுடன் இணைந்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


கடனுதவியுடன் இணைந்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
x

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்கள் கடனுதவியுடன் இணைந்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்

கடனுதவியோடு இணைந்த மானியம்

தமிழக அரசு பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோர் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி எதுவும் வரையறை செய்யப்படவில்லை. மேலும் புதிய தொழில் முனைவோராக இருக்கும் பட்சத்தில் வயது வரம்பு 18 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தற்போது தொழில் செய்து கொண்டிருப்போருக்கு வயது வரம்பு ஏதுமில்லை. மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். அதிகபட்சம் ரூ.1.50 கோடிக்கு மிகாமல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இணையதளத்தில் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தாசில்தாரரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 8925533977, 8925533978 என்ற செல்போன் எண்களையோ அல்லது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story