என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் -தமிழக அரசு அறிவிப்பு


என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் -தமிழக அரசு அறிவிப்பு
x

என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர வருகிற 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆகஸ்டு 16-ந் தேதி கவுன்சிலிங் தொடங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

பிளஸ்-2 தேர்வு கடந்த மாதம் (மே) 28-ந் தேதியுடன் முடிவடைந்தது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. தேர்வு முடிவுகள் 23-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

அமைச்சர் பொன்முடி பேட்டி

உயர்கல்வியில் சேர மாணவ, மாணவிகள் தற்போதே தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கலை அறிவியல் கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி சேர்க்கை தொடர்பாக நேற்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

631 இடங்கள் காலி

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் இந்த ஆண்டு நடைபெற உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து, மாணவர்களின் பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.

மாணவர் சேர்க்கையை எப்படி நடத்துவது என்று இதில் முடிவு எடுக்கப்பட்டது. என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் அதிகம் சேராத நிலை, குறிப்பிட்ட காலத்தில் அவர்களுக்கும் இடம் கிடைக்காத நிலை பற்றியெல்லாம் ஆராயப்பட்டது.

கடந்த ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 631 என்ஜினீயரிங் இடங்கள் காலியாக இருந்தன. அதற்கு முந்தைய ஆண்டில் 750 இடங்கள் காலியாக இருந்தன.

விண்ணப்பிக்கும் தேதி

ஏனென்றால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலில் சேர்ந்துவிட்டு பின்னர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததும் அங்கு சென்றுவிடுவதுதான் இதற்கு காரணம். அவர்கள் சென்ற பின்பு இந்த என்ஜினீயரிங் இடங்கள் காலியாகவே விடப்பட்டுவிடுகின்றன.

இதனால் என்ஜினீயரிங் படிப்பில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடுவது கடந்த காலங்களில் இருந்து வந்தது. எனவே இந்த நிலையை தவிர்க்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மருத்துவ கல்விக்கான 'நீட்' தேர்வு முடிவுகள் வந்த பிறகுதான் என்ஜினீயரிங் கலந்தாய்வு (கவுன்சிலிங்), மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்கள் வந்து, 'நீட்' தேர்வு முடிவு வந்த பிறகு என்ஜினீயரிங் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

அந்த வகையில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் இம்மாதம் (ஜூன்) 20-ந் தேதியாகும். விண்ணப்பிக்க இறுதி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதியாகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை நிரப்பி அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தரவரிசை பட்டியல்

விண்ணப்பங்களை அவர்கள் சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். அல்லது அவர்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்தோ அல்லது மாவட்டத்துக்கு 2 என்ற வீதம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழகம் முழுவதும் 110 இடங்கள் (கடந்த ஆண்டு 55 இடங்கள்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.

தனியாரிடம் சென்று விண்ணப்பித்தால் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறியதால் இந்த வசதியை செய்து கொடுத்திருக்கிறோம். விண்ணப்பிப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பிறகு அதில் உள்ள சான்றிதழ்கள் ஜூலை 20-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 10 நாட்கள் சரிபார்க்கப்படும். ஜூலை 22-ந் தேதி அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமவாய்ப்பு எண் வழங்கப்படும். அதன் பிறகு தரவரிசை பட்டியல் ஆகஸ்டு 8-ந் தேதி அளிக்கப்படும்.

கவுன்சிலிங்

மதிப்பெண் குறைந்துவிட்டது, தரவரிசை குறைந்துவிட்டது என்பது போன்ற புகார்களை அளித்து நிவர்த்தி செய்ய ஆகஸ்டு 9-ந் தேதியில் இருந்து 14-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஆகஸ்டு 16-ந் தேதியில் இருந்து ஆன்லைன் கவுன்சிலிங் தொடங்கும். அதன்படி, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர் ஆகிய சிறப்பு ஒதுக்கீட்டில் வரும் பிரிவினருக்கு 16.8.2022 முதல் 18.8.2022 வரையும்;

பொதுக்கல்வி, தொழில்முறைக்கல்வி, அரசு பள்ளி மாணவருக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு ஆகிய பிரிவினருக்கு 22.8.2022 முதல் 14.10.2022 வரையும்; துணை கவுன்சிலிங் அக்டோபர் 15 மற்றும் 16-ந் தேதிகளிலும்; எஸ்.சி., எஸ்.சி. (அருந்ததியர்) வகுப்பினருக்கு அக்டோபர் 17 மற்றும் 18-ந் தேதிகளிலும் நடைபெறும். 18.10.2022 அன்று கவுன்சிலிங் முடிந்துவிடும்.

இவர்களில் முதல் 15 ஆயிரம் பேருக்கு (முதல் முன்னுரிமை) முதல் வாரத்தில் கவுன்சிலிங் நடைபெறும். அவர்கள் தேர்வு செய்யும் கல்லூரியில் கல்வி கட்டணத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும். வங்கி, ஆன்லைன் என எந்த வகையிலாவது அதை செலுத்திவிட வேண்டும். தவணைகள் எதுவும் கிடையாது.

அப்படி கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் அந்த கல்வி இடம் ரத்து செய்யப்படும். இந்த கல்வி இடம், 2-வது முன்னுரிமை கேட்டு 2-வது கவுன்சிலிங் வருவோருக்கு அளிக்கப்படும். கட்டணம் செலுத்தப்பட்ட பின்புதான் காலியிடங்கள் எத்தனை என்பது தெளிவாக தெரியும். அது தெரிந்தால்தான் அடுத்தடுத்து வருவோருக்கு அந்த இடத்தை அளிக்க முடியும்.

ரேங்க் வரிசைப்படி

அந்த வகையில் முதல் 15 ஆயிரம் பேர், 15 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் பேர், 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் என ரேங்க் வரிசைப்படி கவுன்சிலிங் ஒவ்வொரு வாரமாக நடத்தப்படும். இது முடிந்த பிறகு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரேங்கில் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படும்.

4 சுற்றுகளில் 2 மாதங்களில் மொத்த கவுன்சிலிங்கும் நடத்தி முடிக்கப்படும். இதை மாணவர்களும், மற்ற பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

கலை, அறிவியல்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இம்மாதம் 23-ந் தேதி வெளியாகின்றன. அதன் பிறகு அரசு கலை, அறிவியல் கல்வி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். அதற்காகவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இம்மாதம் 27-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 15-ந் தேதியாகும். ஜூலை 25-ந் தேதியில் இருந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்.

என்ஜினீயரிங் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும். என்ஜினீயரிங் கல்லூரிகளில் கடந்த ஆண்டு கட்டணமே வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story