கள்ளக்குறிச்சியில் நாளை நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்


கள்ளக்குறிச்சியில் நாளை நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:49 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நாளை நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

கள்ளக்குறிச்சி

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாரத்தான் போட்டி

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் உடற்தகுதி கலாசாரத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி நாளை (சனிக்கிழமை) காலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண்களுக்கு 8 கி.மீ. தூரம், பெண்களுக்கு 5 கி.மீ. தூரம், 25 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ஆண்களுக்கு 10 கி.மீ. தூரம், பெண்களுக்கு 5 கி.மீ. தூரம் ஆகிய 2 பிரிவுகளில் மாரத்தான் நடைபெற உள்ளது.

வெற்றி பெறுபவா்களுக்கு பரிசு

இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 5 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் ஆறுதல் பரிசாக 4 முதல் 10 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் 28 நபர்களுக்கு வழங்கப்படும். இப்போட்டியானது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கி, கச்சிராயப்பாளையம் செல்லும் சாலை வழியாக ஏர்வாய்பட்டினம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைகிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் உரிய மருத்துவ தகுதிச்சான்றிதழ் மற்றும் அவரவர் அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிர்ணயித்துள்ள விதிகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கலாம்

இப்போட்டியில் பங்குபெறுபவர்கள் அனைவரும் நாளை காலை 7 மணிக்குள் தங்களது சுயவிவரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், அலுவலக நேரத்தில் தங்களின் பிறப்பு சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் சமர்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை (7299005768) என்ற எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story