விவசாயம், மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்


விவசாயம், மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மண் எடுக்க அனுமதி

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள ஏரிகள், குளங்களில் இருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல் மண், களிமண் வெட்டி எடுப்பதற்கு விண்ணப்பிக்கலாம். விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல் மண், களிமண் வெட்டி எடுப்பதற்காக 296 ஏரிகள் கண்டறியப்பட்டு ராணிப்பேட்டை மாவட்ட அரசிதழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மண் அள்ள விரும்புவோர் நீர் நிலைகள் உள்ள வருவாய் கிராமம் அல்லது அருகே உள்ள வருவாய் கிராமத்தில் வசிக்க வேண்டும். சிட்டா, அடங்கல் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

நிபந்தனைகளை பின்பற்றி

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர், புன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அளவில் மண் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்டம் செய்வதற்கு 60 கன மீட்டர் களிமண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட அரசிதழில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றி பயன் பெறலாம்.

தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் சடத்தாங்கல், ஜம்புகுளம், பாணாவரம், கல்பலாம்பட்டு, கறியாக்கூடல், சூரைக்குளம், கீழ் வீராணம், கர்ணாவூர், வேடந்தாங்கல், மேல்களத்தூர், புன்னை, சோளிங்கர், இச்சிபுத்தூர், கோவிந்தசேரி, ஆசநெல்லிக்குப்பம் ஏரி, ஆலப்பாக்கம், கல்மேல்குப்பம் சித்தேரி, துர்கம், புன்னப்பாடி, பழையனூர், சென்னசமுத்திரம், பரிகல்பட்டு, தாமரைப்பாக்கம், புதுப்பாக்கம், மருதம், தத்திரவாடி, புதுப்பாடி, கண்ணாடி பாளையம், தொண்டைமா நத்தம், கல்வடி தாங்கள்குட்டை, கொசவன் குட்டை, தாங்கல் குட்டை, காட்டுப்பாக்கம் ஆகிய ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story